ஆப்கன் நிலநடுக்கம் : மனிதாபிமான உதவிகளை வழங்க இந்தியா தயார் என பிரதமர் மோடி பதிவு!
ஆப்கானிஸ்தானில் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு நேற்று இரவு 11:47 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மேலும் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவானது. தொடர்ந்து 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது.
தொடர்ந்து அடுத்தடுத்து ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுவரை 800 பேர் உயிரிழந்ததாகவும் 2500 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் மீட்புப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி ஆப்கன் நிலநடுக்கத்தால் ஏற்ப்பட்ட உயிரிழப்புகளுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
”ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்புகள் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த கடினமான நேரத்தில் துயரமடைந்தவர்களின் குடும்பங்களுடன் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன, மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் நிவாரணங்களையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது”
என்று தெரிவித்துள்ளார்.