"கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம்" - அமைச்சர் சேகர்பாபு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலையில் உணவகம் துவங்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்வதற்காகவும் கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கர் பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் 30 ஆம் தேதி காலை 11 மணிக்கு திறந்து வைத்தார்.
இந்நிலையில், 28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்கள், முழு குளிர்சாதன வசதி, மழை நீர் வடிகால்கள், சூரிய தகடுகள், 2,285 பார்க்கிங் வசதிகள், 500 தனியார் பேருந்து நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: மே 10-க்குள் இந்திய ராணுவம் வெளியேற்றப்படும் – மாலத்தீவு அதிபர் முய்ஸு!
இந்த நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ரூ.14 கோடியே 35
லட்சம் மதிப்பில் புதிய காவல் நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி, பணிகளை துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:
"தாம்பரம் மாநகராட்சி ஆணையரின் நேரடி பார்வையில் பேருந்து நிலைய பாதுகாப்பிற்கேற்ப முழு கட்டமைப்புடன் காவல் நிலையம் அமைக்கபட உள்ளது. நுழைவாயிலில் ரூ.4.5 கோடி மதிப்பில் வரவேற்பு வளைவு அமைக்க உள்ளது. மேலும் முடிச்சூரில் அமைக்கபடும் ஆம்னி பேருந்து நிருத்தம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும்.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கடை வைத்திருந்த 11 உரிமையாளர்களுக்கும் கிளாம்பாக்கத்தில் சலுகை கட்டணத்தில் இடம் வழங்கபடும். அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விரைவில் மலிவு விலை உணவகம் மற்றும் ஏடிம் மையம் துவங்கபடும்."
இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.