'பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள்' - கடலூரில் மத்திய குழு ஆய்வு!
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக விட்டு விட்டு கனமழை பெய்து
வருதாலும், வானம் மேகமூட்டத்துடனும், தொடர்ந்து பனிப்பொழிவுடனும் உள்ளதால் அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல் மணிகளைக் கொள்முதல் செய்ய விவசாயிகள், விவசாய சங்கத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, 17% ஈரப்பதத்தில் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதைத் தளர்வு செய்து 22% ஈரப்பதம் வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கக் கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசின் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கடிதம் எழுதி இருந்தார். இதை ஏற்று, இது தொடர்பாக ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழுவை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இதனிடையே கடந்த 22 ம் தேதி பிற்பகல் திருச்சி வந்த மத்திய குழுவினர் முதலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து நேற்று திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த நிலையில் இன்று காலை மயிலாடுதுறை மாவட்டத்திலும், பிற்பகல் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மத்திய குழுவினர் 6 பேர் விவசாய பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து நாளை (ஜன.25) நெல் மாதிரிகளை சேகரித்து சென்னையில் உள்ள இந்திய உணவு கழகத்தின் ஆய்வகத்தில் சமர்ப்பித்து இது குறித்து ஆய்வு கூட்டத்தை நடத்தவுள்ளனர்.