For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா கோலாகலம்!

09:48 AM Jun 01, 2024 IST | Web Editor
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா கோலாகலம்
Advertisement

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா 850 ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

ராமநாதபுரம் மாவட்டம்,  ஏர்வாடியில் அமைந்துள்ள சுல்தான் செய்யது இப்ராகிம்
பாதுஷா ஷஹுது ஒலியுல்லா தர்ஹாவில் ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடுத்
திருவிழா ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெறுவது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டு 850-வது சந்தனக்கூடு மத நல்லிணக்கவிழா தர்ஹா ஹக்தார்கள் முன்னிலையில் கடந்த 9-ம் தேதி மவுலீது ஷெரிப் (புகழ் மாலை) மற்றும் சிறப்பு பிரார்த்தனையுடன் தொடங்கப்பட்டது.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று மாலை 4:30 மணிக்கு நடைபெற்றது.  அதன்படி யானை,  குதிரைகள் நடனமாட,  தாரை தப்பட்டை முழங்க,  வான வேடிக்கையுடன் ஊர்வலமாக தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இன்று (ஜுன் 1) அதிகாலை 3 மணியளவில் ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து,  அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு,  அதிகாலை 5:50 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது.  தர்ஹாவை 3 முறை சந்தனக்கூடு வலம் வந்த நிலையில்,  சிறப்பு பிரார்த்தனைக்கு பின் மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண போர்வைகளால் போற்றப்பட்டு மல்லிகை பூ சரங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது.

இவ்விழாவில் தென்னிந்தியா,  தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்
கலந்து கொண்டனர்.  இதற்காக மதுரை,  கோவை,  திருச்சி, திண்டுக்கல்,  ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏர்வாடி தர்ஹாவிற்கு இயக்கப்பட்டன.  இவ்விழாவில்  பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

மேலும்,  தர்ஹா வளாகத்தில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினர் சார்பில் கண்காணிக்கப்பட்டது.   மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags :
Advertisement