ஆசிரியர் சொன்ன அட்வைஸ் - கல்லூரி கால நினைவைப் பகிர்ந்த பிரதீப்!
‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கிவரும் திரைப்படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், சிநேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையில் இப்படத்திலிருந்து ‘ரைஸ் ஆப் தி டிராகன்’, ‘வழித்துணையே’, ‘ஏன் டி விட்டுப்போன’ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இப்படம் காதலர் தினத்தன்று (பிப்.14) வெளியாக இருந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸை தொடர்ந்து டிராகன் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 21ஆம் தேதிக்கு தள்ளிப்போனது.
இதையடுத்து சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியானது. அதில் இன்ஜினியர் மாணவராக வரும் பிரதீப் ரங்கநாதன், ஆசிரியர்களுக்கு அடங்காமல் சரிவர படிக்காமல் அரியர் வைத்து ஃபெயிலியர் மாணவராக இடம்பெற்றிந்தார். இது அவரின் வாழ்க்கையில் பிரதிபலிக்க அதிலிருந்து அவர் மீண்டு வர “உடனே சக்சஸ்ஃபுல் ஆகணும்” என்ற வசனங்களை பேசி அதற்கான முயற்சிகளை எடுப்பதுபோல் காட்சிகள் இருந்தன. இந்த டிரெய்லரில் படிப்பு தொடர்பாக மாணவர்களை தவறாக வழிநடத்தும் சில வசங்களும் காட்சிகளும் இருப்பதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் தனது கல்லூரி கால தேர்வெழுதிய பேப்பரை பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில் “தேர்வுகளில் கதைகள் எழுத வேண்டாம் என்று ஆசிரியர் என்னிடம் சொன்னார், அதனால் நான் அதை என் தொழிலாக மாற்றினேன்” என்று குறிப்பிட்டு, தனது வேதியியல் யூனிட் டெஸ்ட் பேப்பரை பகிர்ந்தார். அதில் “நைஸ் ட்ரை, மை டியர் பிரதீப் தயவு செய்து கதை எழுத வேண்டாம்” என்று ஆசிரியர் திருத்தியிருந்தார். மேலும் பிரதீப் தனது பதிவில் பின்குறிப்பாக இது வெறும் யூனிட் தேர்வுதான், மெயின் தேர்வுகளில் நன்றாக படித்தாக கூறியுள்ளார். அத்துடன், டிராகன் படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.