திருவெறும்பூர் அருகே திருமணத்தை மீறிய உறவு - ஒருவர் படுகொலை!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள அம்பேத்கார் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் ரமேஷ் குமார்(50). இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த வீரமுத்து(52) என்பவரும் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (45). இந்த நிலையில் லட்சுமிக்கும் ரமேஷ் குமாருக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரமேஷ் குமார் நேற்று இரவு மாரியம்மன் கோயில் அருகே லட்சுமியை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் பற்றி வீரமுத்துவிற்கு தெரிந்ததால் ரமேஷ் குமாருக்கும், வீரமுத்துக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும், அப்போது அங்கிருந்த மக்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ரமேஷ் குமார் தனது மைத்துனர் தியாகராஜன் மகன் ரோகித் சர்மா என்பவரின் செல்போனை வாங்கிக் கொண்டு ரயில்வே ட்ராக் வழியாக சென்றதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ரோகித் சர்மா நள்ளிரவு ரயில்வே ட்ராக் பகுதிக்கு சென்று பார்த்த போது ரமேஷ் குமார் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்துள்ளார். உடனே இது குறித்து ரோகித் சர்மா திருவெறும்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் ரமேஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தலை உள்ளிட்ட மூன்று இடங்களில் காயத்துடன் இருந்த வீரமுத்துவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து லட்சுமி மற்றும் வீரமுத்துவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு செய்தனர். இந்த சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.