"கரூர் கூட்ட நெரிசலுக்கு நிர்வாக அலட்சியமே காரணம்" - NDA எம்.பி.க்கள் குழு குற்றச்சாட்டு!
கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தவெக நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
தவெக தலைவர் விஜய் நடத்திய பரப்புரைக் கூட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட நிர்வாக அலட்சியமே காரணம் என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உண்மை அறியும் குழு, பாஜக தலைமையிடம் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"கரூர் உயிரிழப்புகள் நிர்வாக அலட்சியத்தால் ஏற்பட்டுள்ளது. 2000 முதல் 3000 பேர் மட்டுமே இருக்கக் கூடிய இடத்தில் 30,000 பேர் வரை குவிய அனுமதித்து தவறு. இந்த இடத்தில் கூட்டம் நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியது நிர்வாக அலட்சியத்தைக் காட்டுகிறது. மேலும், போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படவில்லை. நண்பகல் 12 மணிக்கு விஜய் வருவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 9 மணி முதலே கூட்டம் வந்துள்ளது. ஆனால், விஜய் மாலை 7 மணிக்கே நிகழ்விடம் வந்தார்.
விஜய் பேசிய பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், கூட்டத்தில் பீதி ஏற்பட்டுள்ளது. சிலர் அருகிலுள்ள திறந்த கழிவுநீர் கால்வாய்களில் விழுந்து உயிரிழந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கிய மற்றும் அதை நிர்வகித்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்"