For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு குறித்த நோட்டீஸ்!

11:48 AM May 30, 2024 IST | Web Editor
மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வு குறித்த நோட்டீஸ்
Advertisement

விருப்ப ஓய்வு பெற விரும்பும் மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஜூன் 14 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என BBTCL நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

Advertisement

திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது
மாஞ்சோலை,  காக்காச்சி நாலுமுக்கு,  ஊத்து குதிரை வெட்டி உள்ளிட்ட மலை
கிராமங்கள்.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500  அடி உயரத்தில் மாஞ்சோலையும் 4500
அடி உயரத்தில் காக்காச்சியும் அமைந்திருக்கிறது.

தமிழ்நாட்டில் தேயிலை உற்பத்தி செய்யப்படும் ஊட்டி,  கொடைக்கானல்,  வால்பாறை உள்ளிட்டவற்றிற்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தை பெறுவது மாஞ்சோலை தேயிலை தோட்டங்கள்.  சிங்கம்பட்டி ஜமீனுடன் ஏற்பட்ட ஒப்பந்தத்தினுடைய அடிப்படையில் சுமார் 99 ஆண்டுகள் குத்தகைக்காக பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனம் அங்கு தேயிலையை பயிரிட்டு அறுவடை செய்யும் பணிகளை மேற்கொண்டது.

இங்கு உள்ள தேயிலை தோட்டங்களில் பணிபுரிவதற்காக திருநெல்வேலி மாவட்டத்தின் மானூர் மற்றும் தூத்துக்குடி,  ராஜபாளையம்,  தென்காசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தொழிலாளர்களாக மாஞ்சோலை,  காக்காச்சி ,  நாலுமுக்கு ஊத்துகுதிரை வெட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு குடி பெயர்ந்து பணியாற்றினர்.

பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இங்கு தேயிலை பயிரிடப்பட்டு அறுவடை
செய்யப்படுகிறது.  நாள் ஒன்றிற்கு பல ஆயிரம் கிலோ என்ற அளவிற்கு தேயிலை
உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த தேயிலை தோட்டங்களில் தொடக்க காலத்தில்
1800 முதல் 2000 வரை தொழிலாளர்கள் பணிபுரிந்துள்ளனர்.

பின் நாட்களில் ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டு நிலங்கள் அரசுடமையாக்கப்பட்ட போதும் அரசுடன் இந்த நிறுவனம் ஒப்பந்தத்தை புதுப்பித்துக் கொண்டு தொடர்ந்து தேயிலை தோட்டங்களை நடத்தி வந்தது.  தொடர்ந்து நாட்டிலேயே முன்மாதிரியாக கடந்த 1991 ஆம் ஆண்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளில் ரசாயன கலவைகள் இல்லாமல் தேயிலை பயிர்கள் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டு அவை வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்பட்டன.  அதன் அடிப்படையில் தான் மாஞ்சோலை தேயிலைக்கு தனி மதிப்பு கிடைத்ததுடன் இன்று வரை அதன் பெயர் ஓங்கி நிற்கிறது.

மாஞ்சோலை,  காக்காச்சி,  நாலுமுக்கு,  ஊத்து குதிரைவெட்டி என்று தனித்தனியாக ஆலைகளை அமைத்து தேயிலை உற்பத்தி நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு குதிரைவெட்டி தேயிலை தோட்டம் மூடப்பட்டது.  அங்குள்ள தொழிலாளர்கள் இதர பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டு அங்கு அவர்கள் பணிபுரிய வழிவகைகள் செய்யப்பட்டன.

ஆர்கானிக் தேயிலை உற்பத்தி ஏற்றுமதி என்று தேயிலை தொழில் மிக மும்மரமாக நடைபெற்று வந்த காலகட்டத்தில் தான் 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் தேதி ஊதிய உயர்வு கோரி திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபெற்ற ஊதிய உயர்வு பேரணியில் ஏற்பட்ட வன்முறையில் காவல்துறையின் தடியடி தாக்குதலில் இருந்து தப்பிக்க ஓடி தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.

தற்போதைய சூழலில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் சுமார் 650 தொழிலாளர்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.  நாள் ஒன்றிற்கு பல்லாயிரம் கிலோ என்று உற்பத்தி செய்யப்பட்டு வந்த தேயிலை உற்பத்தி வெறும் 2000 கிலோ என்ற அளவிற்கு குறைந்துள்ளது.  இப்படி பல்வேறு வரலாறுகளையும் தன்னகத்தே கொண்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் ஒப்பந்த காலம் வரும் 2028 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் முடிவடைகிறது.

இதற்கு முன்னோட்டமாக கடந்த 2018 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து உத்தரவும் பிறப்பித்தது.  அதன் ஒரு பகுதி தான் தேயிலை தோட்டத்தில் உற்பத்திகளை நிறுத்தி அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கான பண பலன்களை வழங்குவது. தொழிலாளர்களுக்கான பணபலன்களை வழங்கி 2028 ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்த நிலத்தையும் வனத்துறை இடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தற்போது விருப்ப ஓய்வு பெற விரும்பும் தொழிலாளர்கள் விண்ணப்பிக்க ஜூன் 14ஆம் தேதி வரை அவகாசம் வழங்கி நோட்டீஸ் அனுப்பியுள்ளது BBTCL நிர்வாகம்.  அதன்படி, விண்ணப்பிக்கும் தொழிலாளர்களுக்கு பலன்களுடன் கருணைத்தொகை மற்றும் போனஸ் வழங்கப்படும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது.

விண்ணப்பிக்கும் தொழிலாளர்களுக்கு தனித்தனியாக நோட்டீஸ் வழங்கப்படும்.  இந்த அறிவிப்பின் அடிப்படையில் விண்ணப்பிக்கும் தொழிலாளர்கள் அதன் பின் தேயிலை தோட்டங்களில் இருந்து குறிப்பிட்ட காலத்திற்குள் வெளியேற வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

Tags :
Advertisement