மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.
18வது மக்களவை கூட்டத் தொடர் கடந்த ஜூன் 24-ம் தேதி கூடிய நிலையில், கடந்த 27-ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவையின் கூட்டு கூட்டத் தொடரிலும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கலந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து நேற்று (ஜூலை 1) குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
விவசாயிகள், இந்து, நீட் தேர்வு, முதலமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தியின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் பிரதமர் மோடி இன்று மக்களவையில் உரையாற்றினார். குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி 2.15 மணிநேரம் பேசினார்.
இதில், மக்களவைத் தேர்தல் வெற்றி, ராகுல் காந்தியின் பேச்சு, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
மாலை 4.15 மணிக்கு உரையைத் தொடங்கிய மோடி, மாலை 6.30 மணிக்கு, கிட்டத்தட்ட 2 மணி 15 நிமிடங்களுக்கும் நீடித்தது. அவரது உரைக்குப் பிறகு, தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மக்களவையை தேதி குறிப்பிடாமல், அவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.