கோவையை தொடர்ந்து நொய்டாவில் உருவாகும் ஆதியோகி சிலை!
கோயம்புத்தூரைத் தொடர்ந்து உத்தர பிரதேச மாநிலத்தில் ஆதியோகி சிலையை அமைப்பதற்கு ஈஷா அறக்கட்டளை அலோசித்து வருகிறது.
மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஆன்மீக குருக்களில் ஒருவர் சத்குரு. தனது வாழ்க்கையை ஆன்மீகத்தில் ஈடுபடுத்திக் கொண்ட அவருக்கு ஏராளமான சீடர்களும் பக்தர்களும் உள்ளனர்.
இவர் ஈஷா அறக்கட்டளை, ஈஷா யோகா மையம் ஆகிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவர் நிறுவி வருகின்ற ஈஷா அறக்கட்டளையானது உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றதாகும். இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, இங்கிலாந்து, லெபனான், சிங்கப்பூர், கனடா, மலேசியா, உகாண்டா, சீனா, நேபாளம், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் ஈஷா அறக்கட்டளை யோகா பயிற்சிகளை வழங்கி வருகிறது.
2017 ஆம் ஆண்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் வடிவமைத்த 112 அடி ஆதி யோகி சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி 'ஈஷா யோகா' மையத்தில் திறந்து வைத்தார். இந்நிலையில் “கோவையில் உள்ள ஆதியோகி சிலை பெரிதாக இல்லை என்று என்னிடம் வந்து சொல்கிறார்கள். எங்களுக்கு பெரிய ஆதியோகி சிலை வேண்டும். எனவே, இந்த கிரகத்தில் ஆதியோகியின் மிகப்பெரிய முகம் வட இந்தியாவில் இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியும், ”என்று சத்குரு தனது பக்தர்களிடம் சமீபத்தில் கூறியுள்ளார்.
இதனையடுத்து இந்தியாவின் நான்கு திசைகளிலும் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேற்கு முழுவதும் சிவன் சிலையை நிறுவ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் ஒரு பகுதியாக உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள யமுனை நதிக்கும், யமுனை நதியின் வடகிழக்கு கரையின் அருகில் கட்டப்பட்டு வரும் ஜெவார் சர்வதேச விமான நிலையத்திற்கு நடுவில் சிவன் சிலையை அமைப்பதற்கு ஈஷா அறக்கட்டளை முடிவெடுத்துள்ளது. பச்சை நிலங்களும், யமுனை நதியும் அங்கு ஓடுவதால் அந்த இடத்தை தேர்வு செய்துள்ளதாக அறக்கட்டளையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் விமான போக்குவரத்து அமைச்சகமும் சத்குருவின் குழுவிற்கு சிலை கட்டுமானத்தை தொடர அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சிலையை அமைப்பதற்கான யோசனைகள் ஆலோசிக்கப்பட்டு வருகின்றன.