For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாலஸ்தீன ஆதரவு மாடலை பயன்படுத்திய விவகாரம் - மன்னிப்புக் கோரிய அடிடாஸ்...

01:30 PM Jul 20, 2024 IST | Web Editor
பாலஸ்தீன ஆதரவு மாடலை பயன்படுத்திய விவகாரம்   மன்னிப்புக் கோரிய அடிடாஸ்
Advertisement

அடிடாஸ் நிறுவனம் தனது விளம்பரத்திற்கு அமெரிக்க மாடல் அழகி பெல்லா ஹதித்தை பயன்படுத்தியதற்கு மன்னிப்பு கோரியுள்ளது. 

Advertisement

பிரபல காலணி நிறுவனமான அடிடாஸ் தனது சமீபத்திய விளம்பரத்திலிருந்து அமெரிக்க மாடல் அழகி பெல்லா ஹதித்தை நீக்கியதாக தெரிவித்துள்ளது. மேலும் அந்த விளம்பரத்தில் பெல்லா ஹதித்தை பயன்படுத்தியதற்கும் அனைவரிடமும் மன்னிப்பு கோரியுள்ளது.

அடிடாஸ் நிறுவனம் மன்னிப்பு கோர காரணம் என்ன?

ஜெர்மனியைச் சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் காலணி,  ஆடை உள்ளிட்டவற்றை தயாரித்து உலகம் முழுவதும் சந்தைப்படுத்தி வருகிறது. குறிப்பாக கிரிக்கெட், கால்பந்து, நீச்சல் என அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தேவையான ஷூ உள்ளிட்ட பொருட்களை உற்பத்தி செய்வதில் முன்னணி நிறுவனமாக உள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் நடைபெற உள்ள நிலையில் இந்நிறுவனம் 1972 ஒலிம்பிக் வீரர்களால் பயன்படுத்தப்பட்ட SL72 வகை ரெட்ரோ ஷூக்களை மீண்டும் அறிமுகப்படுத்தியது.  இதற்கான விளம்பர முகமாக அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகியான பெல்லா ஹதித்தை பயன்படுத்தியுள்ளது. பெல்லா ஹதித்தை இந்த விளம்பரத்தில்  பயன்படுத்தியதே அடிடாஸ் நிறுவனம் மன்னிப்பு கோர காரணமாக அமைந்தது.

காரணம் அவர் ஒரு அமெரிக்கவாழ் பாலஸ்தீனர் என்பதுதான். ஒரு பாலஸ்தீனரை ஒலிம்பிக் போட்டிக்கான ரெட்ரோ ஷூ விளம்பரத்தில் பயன்படுத்தியதற்கு இஸ்ரேல் அரசாங்கம் மட்டுமின்றி அமெரிக்க யூதர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அடிடாஸ் நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் எனவும் கூறினர். #BoycottAdidas என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டானது.

பாலஸ்தீன மாடல் விளம்பர முகமாக பயன்படுத்தப்பட்டதற்கு கண்டனங்கள் எழ காரணம் என்ன? 

விளையாட்டு உலகையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆண்டு 1972. அந்த ஆண்டு ஜெர்மனியின் மியூனிச்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட இஸ்ரேல் அணி மீது பயங்கர தாக்குதல் நடந்தது. செப்டம்பர் 5 ஆம் தேதி 11 இஸ்ரேலிய வீரர்களும், ஒரு ஜெர்மனிய காவலரும் கறுப்பு செப்டம்பர் என்று அழைக்கப்படும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினரால் கொல்லப்பட்டனர். ஒலிம்பிக் என்று கூறினாலே அனைவராலும் இந்த சம்பவம் தற்போது வரை நினைவுக் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டி சம்பந்தப்பட்ட விளம்பரத்திற்கு பாலஸ்தீன ஆதரவுடைய மாடலை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில்தான் ஜெர்மனி நிறுவனமான அடிடாஸ் மன்னிப்பு கோரியுள்ளது.

பெல்லாவின் பாலஸ்தீன சார்பு நிலைப்பாடே அவர் இந்த விளம்பரத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு காரணம். பாலஸ்தீனத்திற்கு எதிரான தாக்குதல்களுக்கு அவ்வப்போது இவர் குரல்கொடுத்து வருகிறார். இவரின் அரசியில் நிலைப்பாடு தற்போது அவரது தொழிலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement