ஆடி கிருத்திகை - திருச்செந்தூர் முருகன் கோயிலில் பரிகார பூஜைகள் செய்து பக்தர்கள் இன்றும் வழிபாடு!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்து இன்றும் வழிபாடு நடத்தினர்.
தமிழ்க் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரத்தில் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பு வாய்ந்தது. அந்தவகையில் தமிழ் மாதங்களில் ஆடி, கார்த்திகை, தை, ஆகிய மூன்று மாதங்களில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை வழிபடுவது கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது. மேலும் இந்த நாட்களில் முருகப்பெருமானை வழிபட்டால் திருமண தடை நீங்கும் மற்றும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற ஐதீகம் உள்ளதாக மக்கள் நம்புகின்றனர்.
ஆடி மாத கிருத்திகை நேற்று மதியம் 2.40 மணியிலிருந்து இன்று மதியம் 1.40 மணி வரை உள்ளது. இந்த நிலையில் நேற்றே அனைத்து முருகன் கோயில்களிலும் ஆடிக்கிருத்திகை பூஜைகள் நடைபெற்றன. இந்த நிலையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி கிருத்திகை இன்று கொண்டாடப்படுகிறது.
திருச்செந்தூர் கோயிலில் காலையில் நடைபெறக்கூடிய உச்சிகால பூஜையில் வரக்கூடிய நட்சத்திரத்தை கொண்டே திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. இதனைத்தொடர்ந்து திருச்செந்தூர் கோயிலில் இன்று கொண்டாடப்படுகிறது. ஆடி கிருத்திகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய குவிந்தனர்.
பக்தர்கள் திருமண தடை , குழந்தை பாக்கியம், நாக தோசம் உள்ளிட்ட பல்வேறு பரிகார பூஜைகள் செய்தும், யாகம் வளர்த்தும் சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் ஏராளமன
பக்தர்கள் காவடி சுமந்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும் பக்தர்கள்
நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அதிகாலை 4 மணி முதலே முதலே கடலில் புனித நீராடிய பக்தர்கள், நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் சுமார் 3 மணி நேரம் காத்திருந்து நீராடினர்.
அதனைத்தொடர்ந்து ரூ.100 கட்டண தரிசன வரிசையில் சுமார் 3 மணி நேரமும், பொது
தரிசனத்தில் சுமார் 4 மணி நேரமும் காத்திருந்து சுவாமி தரிசனம் செயதனர். ஆடிக் கிருத்திகை தினத்தில் பரிகார பூஜைகள் செய்து வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளதால் அதிகாலை முதலே ஏராளமான
பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.