For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம்?

03:24 PM Dec 07, 2024 IST | Web Editor
விசிகவிலிருந்து ஆதவ் அர்ஜூனா நீக்கம்
Advertisement

விசிகவிலிருந்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா நீக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

விகடன் பிரசுரம் மற்றும் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் புத்தகத்தை வெளியிட, ஓய்வுபெற்ற நீதியரசர் கே. சந்துரு உடன், ஆனந்த் டெல்டும்டேவும் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியிருந்தார்.

இது கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இந்நிலையில் கட்சியிலிருந்து ஆதவ் அர்ஜூனாவை நீக்க தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக கட்சி நிர்வாகிகளுடன் வன்னி அரசு, ரவிக்குமார் எம்பி, ஷாநவாஸ் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். விசிக கொள்கை கோட்பாடுகளுக்கு எதிராக ஆதவ் பேசியதால் ஒழுங்கு நடவடிக்கை எனக் கூறப்படுகிறது.

ஆதவ் அர்ஜூனாவின் கருத்துகளுக்கு விசிக பொறுப்பல்ல, அது அவரின் தனிப்பட்ட கருத்துகள் என திருமாவளவன் சமீப காலமாகவே திருமாவளவன் கூறி வருகிறார். இதனிடையே திமுகவுக்கும், விசிகவுக்குமான உரசலுக்கு காரணமானவர் ஆதவ் அர்ஜூனா என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது.

நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜூனா பேசியதாவது;

“கால சூழ்நிலைகள் தலித் மக்களுடைய விளங்குகளை உடைக்கும். அதற்கான காலம் விரைவில் வரும். மன்னராட்சி இனி ஒருபோதும் தமிழகத்தில் மீண்டும் வராது. தலித் அல்லாத ஒருவர் இந்த புத்தகத்தை வெளியிடுவது அண்ணல் அம்பேத்கருடைய கனவு. கொள்கைகள் பேசிய கட்சிகள் ஏன் இதுவரை அம்பேத்கரை மேடை ஏற்றவில்லை. தமிழகத்தில் முதல்முறையாக அனைத்து அமைச்சர்களும் அவர்களது மாவட்டங்களில் அம்பேத்கரின் உருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இதுதான் இந்த நிகழ்ச்சியின் வெற்றி.

2026 தேர்தலுக்கான பணிகளில் மன்னராட்சி ஒழிக்க வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியது போல, பிறப்பால் ஒரு முதலமைச்சர் இனி உருவாகக்கூடாது. தமிழ்நாடு ஊழலை கடந்து சென்று இருக்கிறது. மதப் பெரும்பான்மை தமிழகத்தில் கிடையாது. பாஜகவுக்கு இரண்டு சதவீத வாக்குகளுக்கு மேல் தமிழகத்தில் கிடையாது. தமிழகத்தில் பொதுத் தொகுதியில் தலித் வேட்பாளரை இன்று வரை நிறுத்த முடியவில்லை.

ஒரு சாதாரண மனிதன் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நிலைக்கு ஆதரவு தந்த முதல் குரல் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் குரல். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்று பின்னால் பேச தேவையில்லை. நேரடியாக பேசுவோம். ஏன் சினிமாத்துறை ஒரு நிறுவனத்தின் மூலம் கட்டுபடுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் உள்ள ஊழலை எடுத்துப் பேசுங்கள். மதவாதத்தை எடுத்துப் பேசுங்கள். தமிழ் தேசியம் என்றாலும், திராவிடம் என்றாலும் எல்லோரும் சமம் என்ற கொள்கைதான் போதிக்கிறது.

வேங்கை வயல் பிரச்சனை இன்று வரை தீர்க்கப்படாததற்கு காரணம் காவல்துறை அல்ல. இதற்குக் காரணம் ஜாதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர், ஒரு அமைச்சர். 25 சதவீதம் வாக்குகளை வைத்து எப்படி பெரிய கட்சி என்று சொல்ல முடியும். கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாக்கப்பட வேண்டும். வேங்கைவயல் பகுதிக்கு விஜய் செல்ல வேண்டும்” எனப் பேசினார்.

Tags :
Advertisement