“ஆதவ் அர்ஜூனாவிற்கு ஏதோ செயல் திட்டம் இருக்கிறது” - திருமாவளவன்!
“தொடர்ந்து முரண்பாடான கருத்துகளை தெரிவிப்பது, ஆதவ் அர்ஜுனாவுக்கு ஏதோ செயல் திட்டம் இருப்பதை காட்டுகிறது” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“அம்பேத்கரை புகழ்ந்துக் கொண்டே, அரசியலமைப்பு சட்டத்தின் மீது மூர்க்கமான தாக்குதலை பாஜக அரசு நடத்தி வருகிறது. ஆர்டிக்கல் 377-ஐ நீக்கி, சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தனர். பொருளாதாரத்தில் நலிந்த முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு சட்டம் கொண்டு வந்தார்கள். அதுவும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல். சமூக நீதிப் கோட்பாட்டுக்கு எதிரான தாக்குதல். அதேபோல வழிபாட்டு தலங்களுக்கான சட்டம் 1948-இல் வந்தது.
அந்த சட்டத்தை பொருட்படுத்தாமல், அதனை அவமதிக்கும் வகையில் பாபர் மசூதியை இடித்து ராமர் கோயிலை கட்டினர். அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் இருக்கிற சோசியலிசம், செக்யூலரிசம் ஆகியவற்றை நீக்க வேண்டும் என்று பாஜக கட்சியைச் சார்ந்த சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்தார். அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான தாக்குதல்.
இப்போது அதே வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1948-ஐ நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள், பாஜக கட்சியை சார்ந்தவர்கள். அது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான தாக்குதல். இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இதுவும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒருங்கிணைந்து இந்த ஆபத்தை தடுக்க வேண்டும்.
அரசியலமைப்பு சட்டம் குறித்த விவாதத்தில் இது குறித்த கருத்துக்களை பதிவு செய்ய முயற்சித்தேன். ஆனால் அனுமதிக்கவில்லை. தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. ரூ.2475 கோடி வெள்ள நிவாரண நிதி வேண்டும் என தமிழ்நாடு அரசு கேட்ட நிலையில், ரூ.900 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழ்நாட்டில் மழை வெள்ள நிவாரண நிதியாக ரேஷன் அட்டைக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம். முதலமைச்சரை சந்தித்தபோதும் இதனை வலியுறுத்தினோம்.
கால்நடைகள், இதர பொருள்களில் சேதங்களுக்கு ஏற்ப நிதி உதவி உயர்த்தி வழங்க வேண்டும். இதற்கு சட்ட வழிகாட்டுதல் இருக்கிறது. அதற்கான அரசாணை இருக்கிறது. அதை அரசு பின்பற்ற வேண்டும். சட்டத்தில் திருத்தம் செய்யலாம். அதனுடைய அடிப்படை கூறுகளில் கை வைக்கக்கூடாது. அழுத்தம் கொடுத்து என்னை யாரும் இணங்க வைக்க முடியாது. நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டாம் என்ற முடிவு நான் சுதந்திரமாக எடுத்தது. விஜய் மாநாடு முடிந்த உடனேயே நான் விகடன் குழுமத்திடம் சொல்லிவிட்டேன். அமைச்சர் எ.வ.வேலுவை நான் அடிக்கடி சந்திப்பேன்.
இடைநீக்கத்தில் இருக்கும்போது இதுபோல சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவிப்பதே தவறு. தொடர்ந்து விசிகவில் இணைந்து பயணிக்க வேண்டும் என அவர் நினைத்திருந்தால், ஆறு மாதத்திற்கு அவர் அமைதியாக இருந்திருப்பார். தொடர்ந்து முரண்பாடான கருத்துகளை தெரிவிப்பது, எதோ ஒரு செயல்திட்டம் இருப்பதை காட்டுகிறது.
இடைநீக்கம் கண்துடைப்பல்ல. அது ஒரு நடவடிக்கை. எடுத்த உடனேயே ஒருவரை நீக்கி விட முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு அணுகுமுறை இருக்கும். விசிகவில் தலித் அல்லாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது நிதானமாகதான் எடுப்போம்” என தெரிவித்தார்.