மத்திய அமைச்சரவையில் தென்னிந்தியாவுக்குக் கூடுதல் இடம்? - நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவல்!
மத்திய அமைச்சரவையில் தென்னிந்தியாவுக்குக் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 4ஆம் தேதி மக்களவைத் தேர்தல் 2024இன் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 234 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும், கூட்டணிக் கட்சிகளோடு இனைந்து பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
பாஜக அரசின் கடந்த மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த அமைச்சர்கள் பலரும் கூட இந்தத் தேர்தலில் களமிறங்கியிருந்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளனர். இதில் முக்கியத் தலைவர்களான ஸ்மிருதி இரானி முதல் தமிழகத்தைச் சேர்ந்த எல். முருகன் வரை அடங்குவர்.
இந்நிலையில், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை இன்று மாலை 4 மணிக்கு இந்திய தேர்தல் ஆணைய குழு சந்திக்கிறது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்கள் பட்டியல், எந்தெந்த கட்சியில் எத்தனை எம்.பி.க்கள் என்பது குறித்த பட்டியலை வழங்க உள்ளனர். மத்திய அமைச்சரவை பரிந்துரைப்படி, 17வது மக்களவையை கலைத்து குடியரசு தலைவர் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த வேளையில், மத்திய அமைச்சரவையில் தென்னிந்தியாவுக்குக் கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நமது நியூஸ் 7 தமிழுக்கு பிரத்தியேக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் வசந்தி அளித்த தகவல்கள் காணொலியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
https://www.facebook.com/news7tamil/videos/258930950614736