அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதலாக ஒதுக்கீடு!
பொன்முடிக்கு சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டதால் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை, கூடுதல் பொறுப்பாக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டது.
கடந்த 2006- 2011-ம் ஆண்டு வரை திமுக ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011-ம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை விடுதலை செய்து கடந்த 2016ம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்து, இதுதொடர்பாக பொன்முடி மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தற்போது உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் இந்த வழக்கை விசாரித்தார்.
இந்த வழக்கில் வருமான வரி கணக்குகள், சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் உட்பட 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட புலன் விசாரணை ஆதாரங்களை சுட்டிக்காட்டி லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதேபோல் பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பொன்முடியின் மனைவி விசாலாட்சியின் வருமானத்தை பொன்முடியின் வருமானமாக லஞ்ச ஒழிப்புத்துறை கணக்கிட்டுள்ளது. பொன்முடியின் மனைவிக்கு 110 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. அவர் தனியாக வர்த்தகம் செய்கிறார். இவற்றை புலன் விசாரணை அதிகாரி கணக்கில் கொள்ளவில்லை என்று பொன்முடி வழக்கறிஞர்கள் சார்பில் வாதிடப்பட்டது. மேலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பிலான வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நவம்பர் 27 ஆம் தேதி எழுத்து பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டு தீர்ப்பானது தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் இந்த வழக்கில் நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், கீழமை நீதிமன்றம் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்தார். மேலும், இந்த வழக்கில் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றும், இதற்காக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டார்.
இதன்படி இன்று (21.12.2023) பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். ரூ.50 லட்சம் அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு, மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
குற்ற வழக்கில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெற்றதால், பொன்முடி தனது எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவியை இழந்தார். இதனை அடுத்து அவர் வகித்து வந்த உயர்கல்வித் துறை அமைச்சர் பதவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதே போல், அமைச்சர் ராஜகண்ணப்பம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியத் துறை, கைத்தறித்துறை அமைச்சர் காந்தியிடம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இவ்விறு இலாகா மாற்றத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.