ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அதானி குழுமம்!
அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம், உலகில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதன் அறிக்கைகள் மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக போலி நிறுவனம் மூலம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இதன் விளைவாக, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் இழப்பைச் சந்தித்தன.
இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து “ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் தவறானவை. உள்நோக்கம் கொண்டவை. அடிப்படை ஆதாரமற்றவை. அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறோம். எங்களுடைய வெளிநாட்டு முதலீடுகள் வெளிப்படை தன்மை கொண்டவை” என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.