For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘அதானி, சாதிவாரி கணக்கெடுப்பு, அரசியலமைப்பு’... முதல் உரையிலேயே நாடாளுமன்றத்தை அதிர வைத்த பிரியங்கா காந்தி!

04:15 PM Dec 13, 2024 IST | Web Editor
‘அதானி  சாதிவாரி கணக்கெடுப்பு  அரசியலமைப்பு’    முதல் உரையிலேயே நாடாளுமன்றத்தை அதிர வைத்த பிரியங்கா காந்தி
Advertisement

மக்களவையில் அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரியங்கா காந்தி, அரசியலமைப்புச் சட்டம் ஒரு பாதுகாப்புக் கவசம் என்றும், ஆனால் பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக அதை உடைக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டது எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி வரும் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் அதானி மீதான குற்றச்சாட்டு, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பிக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்படுவதால், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இதனால் மற்ற அலுவல்கள் குறித்த விவாதங்கள் எதுவும் நடைபெறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 75வது ஆண்டு எட்டியதை குறிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் 4 நாட்கள் விவாதம் நடத்தப்பட இருக்கிறது. இந்த விவாதத்தை, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவையில் இன்று தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து முதல் முறையாக இன்று நாடாளுமன்றத்தில் வயநாடு தொகுதி எம்பி பிரியங்கா காந்தி பேசினார். அரசியல் சாசனம் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரியங்கா காந்தி, மக்களின் பாதுகாப்பு கவசமான அரசியலமைப்பு சட்டத்தை உடைக்க பாஜக பல முயற்சிகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டினார்.

தனது முதல் நாளில் நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தி எம்பி பேசியதாவது;

“142 கோடி இந்தியர்கள், ஒருவரைக் காப்பதற்காக புறக்கணிக்கப்படுவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அனைத்து தொழில்கள், பணம் மற்றும் வளங்கள் ஒரு நபரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. துறைமுகங்கள் முதல் விமான நிலையங்கள் வரை, சுரங்கங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தும் ஒருவருக்கு மட்டும் வழங்கப்படுகின்றன. நமது அரசியலமைப்பு மக்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம். இது நீதி மற்றும் ஒற்றுமைக்கான கவசம். இதனை உடைக்க கடந்த 10 ஆண்டுகளாக ஆளும் தரப்பைச் சேர்ந்த சகாக்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது வருத்தமளிக்கிறது.

தனியார் மயமாக்கல், உயர் பதவிகளில் தனியார் நிறுவனங்களில் பணியாற்றியவர்களை நியமிப்பதன் மூலம் இட ஒதுக்கீடு கொள்கையை பலவீனமாக்க மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்கிறது. மக்களவை தேர்தல் முடிவுகள் இல்லாமல் இருந்திருந்தால், அரசியல் சட்டத்தை மாற்றும் பணியை துவங்கியிருப்பார்கள். இந்த தேர்தலில் வெற்றி பெற்றாலும், அரசியல் சட்டத்தை மாற்றுவது குறித்த விவாதங்கள் இந்த நாட்டில் பலிக்காது என்பதை உணர்ந்துள்ளனர்.

ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கூறுகையில், பெண்களின் தாலி பற்றியும், மாடுகளை பற்றியும் பேசினர். தற்போது தேர்தல் முடிவுகளால் சாதி கணக்கெடுப்பு குறித்து ஆளும் கட்சி பேசுகிறது. கடந்த காலத்தை பற்றி பேசும் பாஜக, இப்போது என்ன செய்கிறார்கள் என்பதை பேச வேண்டும். எல்லாவற்றிற்கும் நேருதான் பொறுப்பா?

அரசியலமைப்பு உருவாக்கத்தில் நீங்கள் எவருடைய பெயரை(நேரு) சில சமயங்களில் சொல்லத் தயங்குகிறீர்களோ அவர் ஹெச்ஏஎல், பெல், செயில், கெயில், ஓஎன்ஜிசி, என்டிபிசி, ரயில்வே, ஐஐடி, ஐஐஎம், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மற்றும் பல பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர். அவரை நீங்கள் புத்தகங்களில் இருந்து துடைக்க முடியும். ஆனால் இந்த தேசத்தின் சுதந்திரத்தில், இந்த தேசத்தை கட்டியெழுப்பியதில் அவரது பங்கை ஒருபோதும் அழிக்க முடியாது” என தெரிவித்தார்.

Advertisement