பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் மீது #ActressSharmila பாலியல் குற்றச்சாட்டு!
பிரபல தயாரிப்பாளர் ஏ.பி. மோகனன் மற்றும் இயக்குநர் ஹரிஹரன் மீது நடிகை சர்மிளா பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்
கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கடந்த 2019-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட இந்தக் குழுவின் அறிக்கையை மாநில அரசு வெளியிடாமல் இருந்தது.
இதனைத் தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த 19-ம் தேதி வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தின. கேரள திரையுலகை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரிடமும் இந்த அறிக்கை பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கேரள உயர்நீதிமன்றமும் அறிக்கையை சமர்பிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர் சித்திக் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்கியதை தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என குற்றம்சாட்டினார். இதற்கிடையே, நடிகைகள் ஒவ்வொருவராக, நடிகர்கள் தங்களுக்கு தந்த பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியம்பிள்ளை ராஜூ, நடிகர் இடவேள பாபு ஆகியோர் மீது நடிகை மினு முனீர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
இந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததைத் தொடர்ந்து மலையாள நடிகர்கள் சங்க (அம்மா) தலைவர் மோகன்லால் உள்பட அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜிநாமா செய்தனர். இதன் பின்னர் விசாரணைக் குழுவில் நடிகைகள் அளித்த புகாரின் அடிப்படையில் நடிகர் சித்திக், இயக்குனர் ரஞ்சித், நடிகர் முகேஷ், ஜெயசூர்யா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரன் மீது நடிகை சர்மிளா பாலியல் தொல்லை குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இதுகுறித்து பேசிய அவர் தெரிவித்ததாவது..
‘1997 ஆம் ஆண்டு அர்ஜுனன் பிள்ளையும் அஞ்சு மக்களும் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது அந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.பி. மோகனன் தன் நண்பர்களுடன் சேர்ந்து ஹோட்டல் அறையில் வைத்து என்னைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்தார். நான் தப்பித்ததால், துணை இளம் நடிகைகளை பாலியல் வன்கொடுமை செய்தனர். அதேபோல், இயக்குநர் ஹரிஹரன் என் நண்பரும் நடிகருமான விஷ்ணுவை அழைத்து, நான் படுக்கைக்கு ஒத்துழைத்தால் வாய்ப்பு தருகிறேன் என்றார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். இதனால், அவர் இயக்கிக் கொண்டிருந்த பரிணயம் படத்திலிருந்து எங்களை நீக்கினார்.
எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் - ஹரிஹரன் கூட்டணியில் 11 திரைப்படங்கள் உருவாகியுள்ளன. இதில், ஒரு வடக்கன் வீரகதா, பரிணயம், கேரள வர்மா பழசிராஜா உள்ளிட்ட படங்கள் பெரிய கவனத்தைப் பெற்றதுடன் தேசிய விருதுகளையும் வாங்கியவை. ஹரிஹரன் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி, மலையாள சினிமாவின் நட்சத்திர இயக்குநர்களில் ஒருவராகவே பார்க்கப்படுகிறார். அவர் மீது சர்மிளா வைத்த குற்றச்சாட்டுக்கள் மலையாள திரையுலகில் அடுத்தடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
நடிகை சர்மிளா மலையாளத்தில் 35 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழிலும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் ’நான்’ படத்தில் இளம் வயது விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்தவர். தற்போது, மலையாளம் மற்றும் தமிழில் நடித்து வருகிறார்.