நடிகை குற்றச்சாட்டு எதிரொலி - பாலக்காடு எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!
கேரளத்தில் நடிகை ரினி ஆன் ஜார்ஜ் என்பவர் சமீபத்தில் ஓர் இளம் அரசியல் தலைவர் தனக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் ஹோட்டலுக்கு வருமாறு அழைத்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அவர் அந்த அரசியல் தலைவரின் பெயரை குறிப்பிடவில்லை. தொடர்ந்து ,பெண்ணிய எழுத்தாளர் ஹனி பாஸ்கரன் என்பவர்,பாலக்காடு தொகுதி எம்எல்ஏவும் கேரள மாநில இளைஞரணித் தலைவருமான ராகுல் மாங்கூட்டத்தில் பெயரைக் குறிப்பிட்டு, தனக்கும் அவர் இதுபோன்ற தொல்லை அளித்ததாக சமூக ஊடகத்தில் பதிவிட்டார். இது மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் கடந்த 25 ஆம் தேதி கேரள காங்கிரஸ் கமிட்டி ராகுல் மாங்கூட்டத்திலை காங்கிரஸ் கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது.
இந்த நிலையில் கேரள குற்றப்பிரிவு போலீசார் தானாக முன்வந்து இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக நடிகை மற்றும் குற்றச்சாட்டுக்கள் வைத்தவர்கள் புகார் எதுவும் அளிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.