அதிமுக முன்னாள் நிர்வாகியின் அவதூறுக்கு நடிகை திரிஷா கண்டனம்!
நடிகை திரிஷா தன்னை பற்றி அவதூறு பரப்பியரை சட்டப்படி சந்திப்பேன் என எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜு, அண்மையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவர் அளித்த பேட்டியில், நடிகை த்ரிஷாவின் பெயரை வெளிப்படையாகக் குறிப்பிட்டு அதிமுகவை விமர்சித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த பிரச்சனைக்கு இயக்குநர் சேரன் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலர் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பிரச்னை குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. அவர் மீது தேவையான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கிறேன். இனிமேல் சொல்ல வேண்டிய மற்றும் செய்ய வேண்டிய சட்ட நடவடிக்கை அனைத்தும் உடனடியாக மேற்கொள்ளப்படும்” என்று பதிவிட்டுள்ளார்.
சேரன் கண்டனம்:
இது பெரும் சர்ச்சையாக வெடித்ததைத் தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சேரன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், எந்தவித ஆதாரமும் இல்லாமல் அவதூறு பரப்பும் ஏ.வி.ராஜுவை கைது செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் கண்டனம்:
நடிகை திரிஷா உள்ளிட்ட திரையுலக நடிகைகள் மீது அவதூறு பரப்பும் விதத்தில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட AV ராஜு பேசிய நிலையில், இதுக்குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஏவி ராஜுவை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் கூறியுள்ளதாவது:
"இன்றைய சமூக வலைதளங்களில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஏவி ராஜு என்பவர் திரை துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். மேலும் நடிகை திரிஷா குறித்தும் ஒரு அவதுறை கூறியிருக்கிறார். அது மட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழ்த்தனமான செய்தியை வெளியிட்டுள்ளார்.
அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதற்கு, அவர்களுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கீழ்த்தனமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.