உடல் எடை குறித்த கேள்வி.. டென்ஷன் ஆன நடிகை கௌரி கிஷன்!
அபின் ஹரிஹரன் இயக்கத்தில், அறிமுக நடிகர் ஆதித்யா மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அதர்ஸ்'. இப்படத்தில் '96' பட நடிகை கௌரி கிஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் முந்தைய செய்தியாளர் சந்திப்பில், "படத்தின் பாடலில் நடிகையை தூக்கினீர்களே நடிகையின் எடை என்ன?" என கதாநாயகனிடம் யூடியூபர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக மற்றொரு தனியார் தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கௌரி கிஷன், "இதுபோன்ற ஸ்டுப்பிட்டான கேள்விகள் எழுப்பப்படுகிறது. இதுபோன்ற கேள்விகள் சரியான கேள்விகள் அல்ல" என பேசியிருந்தார்.
இந்த நிலையில், இன்றைய 'அதர்ஸ்' பட செய்தியாளர் சந்திப்பில், நடிகை கௌரி கிஷனை டார்கெட் செய்யும் விதமாக யூடியூபர்கள் இருவர் மாறி மாறி கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகிறது. இதற்கு பதில் அளித்த நடிகை கௌரி கிஷன், "உடல் எடை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி என்னை உருவக் கேலி செய்ததற்கு சமம். கதாநாயகனிடம் கேட்டாலும், அது என்னுடைய எடை தொடர்பாகவே எழுப்பப்பட்ட கேள்வி, எனவே அந்த கேள்வி தொடர்பாக நான் விமர்சனம் செய்திருந்தேன்" என பதில் அளித்தார்.
இருப்பினும், நடிகை கௌரி கிஷனை பேசவிடாமல் மாறி மாறி சத்தம் எழுப்பியதால் நடிகை கௌரி கிஷன் கண்கலங்கியதாக தெரிகிறது. மேலும், அவர் "செய்தியாளர் சந்திப்பில் ஒரு பெண் கூட இல்லாத நிலையில் இந்த தரமற்ற செயலுக்கு யாரும் கேள்வி எழுப்பமாட்டுகிறீர்கள்" என கேள்வி எழுப்பினார். பின்னர், நடிகை கௌரி கிஷன் செய்தியாளர் சந்திப்பு முடிந்து மௌனமாக புறப்பட்டு சென்றார்.