For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

லைகா நிறுவனத்தின் ரூ.5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

09:03 PM Jan 02, 2024 IST | Web Editor
லைகா நிறுவனத்தின் ரூ 5 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கக்கோரி நடிகர் விஷால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு
Advertisement

சண்டக்கோழி-2 படத்திற்கான ஜிஎஸ்டி தொகையை வழங்காத லைகா நிறுவனத்தின் 5 கோடி ரூபாய் அளவிற்கான சொத்துகளை முடக்க வேண்டுமென நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக நடிகர் விஷால் தாக்கல் செய்துள்ள மனுவில், தன்னுடைய "விஷால் பிலிம் பேக்டரி" பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான சண்டக்கோழி-2 திரைப்டத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு திரையரங்க மற்றும் சாட்டிலைட் வெளியீடு உரிமைக்காக லைகா நிறுவனத்துடன் கடந்த 2018ம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்திற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி படம் வெளியிடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

அதற்கான 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா பட நிறுவனம் செலுத்தாததால், அபராரத தொகையுடன் சேர்த்து 4 கோடியே 88 லட்ச ரூபாயை தான் செலுத்தி உள்ளதாக விஷால் கூறியுள்ளார்.

தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கிய லைகா நிறுவனம், பல இடங்களில் கடன் பெற்று 500 கோடி ரூபாய் செலவில் கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் "இந்தியன் 2" படத்தை தயாரித்து வருவதாகவும், இந்த படம் சரியாக ஓடவில்லை என்றால், கடுமையான நிதி நெருக்கடியை லைகா நிறுவனம் சந்திக்க நேரிடும் எனவும், தனக்கு கிடைக்க வேண்டிய தொகை கிடைக்காமல் போய்விடும் என மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.

மேலும் லைகா நிறுவனம் ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு தயாரிப்பாளர் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதற்கும் வாய்ப்பிருப்பதால், தான் செலுத்திய ஜிஎஸ்டி தொகை மற்றும் அபராதத் தொகையை, வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 423 ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த லைகா நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த வழக்கு முடியும் வரை RBL வங்கியில் லைகா நிறுவனம் தாக்கல் செய்துள்ள சொத்துகளை முடக்க வேண்டுமெனவும் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், வழக்கு தொடர்பாக லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags :
Advertisement