நடிகர் விமலின் புதிய அவதாரம் - 'வடம்' மூலம் மஞ்சு விரட்டு களத்தில் அதிரடி!
மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'வடம்' திரைப்படம், நடிகர் விமலின் நடிப்பில் பூஜையுடன் இன்று கோலாகலமாகத் தொடங்கியது. இந்தப் படத்தை இயக்குநர் V. கேந்திரன் இயக்குகிறார்.
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான மஞ்சு விரட்டை மையமாக வைத்து, காதல், நட்பு, மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கூடிய ஒரு கமர்ஷியல் திரைப்படமாக 'வடம்' உருவாகிறது.
கோயம்புத்தூரில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில், படக்குழுவினர் கலந்துகொள்ள, 1500 பேருக்கு அன்னதானம் அளித்து பிரம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு இனிதே தொடங்கியது.
மஞ்சு விரட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்று. கிராம மக்கள் உயிராக நேசிக்கும் இந்த விளையாட்டின் பின்னணியை மையமாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டை மையமாகக் கொண்டு பல படங்கள் வந்திருந்தாலும், மஞ்சு விரட்டை மையமாக வைத்து உருவாகும் முதல் திரைப்படம் 'வடம்' என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தில் நடிகர் விமலுக்கு ஜோடியாக நடிகை சங்கீதா நடிக்கிறார். மேலும், பாலசரவணன், நரேன், ராமதாஸ் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இயக்குநர் V. கேந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இசையமைப்பாளர் டி. இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மதுரை, பொள்ளாச்சி, காரைக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இந்தப் படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.