நடிகர் விஜய்யின் கட்சி பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெற்றி என்ற படத்தில் 1984-ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக, தனது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரால் திரையுலகிற்கு அறிமுகமானவர் விஜய். அவர், 1992ல் எஸ்.ஏ.சி இயக்கிய ‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி தோல்விகளை சந்தித்து தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள நடிகர் விஜய், தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
குறிப்பாக கடந்த ஆண்டில் பல நலத்திட்டங்களை செய்தார். அந்த வகையில் பள்ளி மாணவர்களிடத்தில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொது அறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ திட்டம் தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் துவங்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல இடங்களில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்பட்டது.
தொடர்ந்து கல்வி விருது வழங்கும் விழா, மருத்துவ முகாம், புயல் நிவாரணம் வழங்கும் விழா போன்றவற்றையும் செய்துள்ளார். இதனிடையே விஜய்யின் கவனம் அரசியலை நோக்கி திரும்பியுள்ளதாக கடந்த சில ஆண்டுகளாக பேசப்பட்டு வந்தது. பின்னர் விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்ற நடிகர் விஜய் முடிவு செய்துள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.
முன்னதாக விஜய் மக்கள் இயக்கத்திற்கு உறுப்பினர்களை சேர்ப்பதற்காக இருந்த (விமஇ) என்ற செயலி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. புதிய கட்சி தொடங்கியுள்ளதால், இதற்கான புதிய செயலி ஒன்று நிறுவப்பட்டு, அதன்மூலம் உறுப்பினர்களை சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது.
இதையும் படியுங்கள் : ‘ஸ்குவிட் கேம் 2’ ரிலீஸ் எப்போது..? - புதிய அப்டேட்..!
அடுத்த 24 மணி நேரத்தில், 1 கோடி உறுப்பினர்களை சேர்த்து சாதனை படைக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. எனவே கட்சி உறுப்பினர்கள், தொண்டர்கள் என அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்று விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்து அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.