படப்பிடிப்பின்போது நடிகர் சூர்யா காயம் - 2 வாரம் ஓய்வெடுக்க முடிவு!
படப்பிடிப்பின்போது காயமடைந்த நடிகர் சூர்யா, மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 2 வாரம் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க முடிவுவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நவம்பர் 22 ஆம் தேதி இரவு படமாக்கப்பட்டது.
அப்போது ரோப் கேமராவின் ஒரு பகுதி திடீரென அறுந்து நடிகர் சூர்யாவின் தோள் மீது விழுந்ததில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த ரோப் கேமரா சுமார் 80 கி.மீ. வேகத்தில் வந்து, அவரது தோள் பட்டையில் விழுந்தது. இதுவே அவரது தலையில் பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும் எனவும் நூலிழையில் நடிகர் சூர்யா உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது.
தற்போது சூர்யாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த நசரத்பேட்டை போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
ஏற்கெனவே ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படபிடிப்பின் போது கிரேன் விழுந்ததில், 2 ஊழியர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். அதேபோல நடிகர் விஜய் நடித்த பிகில் படப்பிடிப்பின் போது, கிரேனில் இருந்து மின் விளக்கு விழுந்து தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். காலா படப்பிடிப்பின் செட் அமைக்கும் போதும் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். ஈவிபியில் நடைபெறும் படப்பிடிப்பு தளத்தில் விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.
இதனையடுத்து, ஈவிபி பிலிம் சிட்டியில் வருவாய்த்துறை அதிகாரிகளும், போலீஸாரும் கண்காணித்து தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இதனிடையே படப்பிடிப்பில் லேசான காயமடைந்த நடிகர் சூர்யா மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி 2 வாரம் வீட்டில் தங்கி ஓய்வெடுக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.