ஆண்டிற்கு இரண்டு படம்... ரசிகர்களுக்கு உறுதியளித்த சூர்யா!
இனி தனது நடிப்பில் ஆண்டிற்கு இரண்டு படங்கள் வெளியாகும் என நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா, தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'சூர்யா 45' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. மேலும் 20 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷா முக்கிய கதாபாத்திரத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது.
இதற்கிடையே நடிகர் சூர்யாவின் 44-வது படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே சமீபத்தில் வெளியான 'கங்குவா' திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெறவில்லை. இந்நிலையில் ஆண்டிற்கு இரண்டு படம் கட்டாயம் வெளியாகும் என நடிகர் சூர்யா உறுதியளித்துள்ளார்.
கோயம்புத்தூரில் 'சூர்யா 45' படப்பிடிப்பிற்கு இடையே ரசிகர்களை சந்தித்து புகைப்படங்கள் எடுத்துக் கொண்ட சூர்யா, “இனி ஆண்டுக்கு இரண்டு படங்கள் வெளியாகும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். சூர்யாவின் இந்தப் பேச்சு அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.