நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி காலமானார்
பிரபலமாக காமெடி நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி. இவர் பரியேறும் பெருமாள், காலா, பிசாசு, ரஜினி முருகன், ஜெய் பீம், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பரமன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தார். இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைத்தனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நடிகர் சுப்பிரமணிக்கு புற்றுநோய் பாதிப்பில் 4-வது கட்டம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகவும் அவருக்குப் பண உதவி தேவை என்றும் குடும்பத்தினர் சமீபத்தில் கோரிக்கை வைத்தனர்.
நடிகர் கார்த்தி அவரது குழந்தைகளின் படிப்புச்செலவை ஏற்பதாக தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், சிம்பு, சூர்யா, கார்த்தி, சாந்துனு, சமுத்திரகனி, சிவகார்த்திகேயன், விஜய் முத்து, பூச்சி முருகன், சின்னத்திரை நடிகர் பாலா, இயக்குநர்கள் ஜவஹர் மித்ரன், வீர அன்பரசு மற்றும் நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், இன்னும் பலர் பணம் உதவி செய்தனர். இந்த நிலையில், நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி சற்று முன் காலமானார். அவரது மறைவுக்கு பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது சூப்பர் குட் சுப்பிரமணியின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கிறது. இன்று இரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு உடல் கொண்டுவரப்படும். நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெற உள்ளது.