"திரைப்படங்களை எதிர்மறையாக விமர்சிப்பதற்காகவே சிலர் திரையரங்கம் வருகிறார்கள்" - நடிகர் சூரி காட்டம்!
திரைப்படங்களை எதிர்மறையாக விமர்சிப்பதற்காகவே சிலர் திரையரங்கம் வருகிறார்கள் என நடிகர சூரி தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 14-ம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது. இப்படம் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக இணையத்தில் பலரும் இப்படத்தை எதிர்மறையாக விமர்சித்தும் (Troll) வருகின்றனர். இந்நிலையில், கங்குவா திரைப்படத்திற்கு எதிராக திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதாக நடிகை ஜோதிகா குற்றஞ்சாட்டிருந்தார்.
இந்நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் சூரி இன்று சுவாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்த பின்னர், நடிகர் சூரியுடன் கோயில் பொதுமக்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்தும், கை கொடுத்தும் மகிழ்ந்தனர். அதன் பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது :
இதையும் படியுங்கள் : மீண்டும் உயர்ந்த தங்கம் விலை! ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
" கங்குவா திரைப்படம் அருமையாக உள்ளது. ஒரு எளிய ரசிகனாக, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. என் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்தக்கட்ட இடத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர். அந்த எண்ணத்திற்கும், முயற்சிக்கும் என்னுடைய பாராட்டுகள்.
கங்குவா திரைப்படத்திற்கு பொதுமக்கள் பலர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ஆனால், ஒரு சிலர் எதிர்மறையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். கங்குவா போன்ற நல்ல சினிமாக்களுக்கு எதிர்மறையான விமர்சனம் கொடுப்பதற்காகவே சிலர் திரையரங்கம் வருகிறார்கள். எதிர்மறையான விமர்சனங்களால் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள முயற்சிக்கிறார்கள்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.