ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா - நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!
ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் காணொலி வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகி ராமச்சந்திரனின் நூற்றாண்டு விழா, அதிமுக சாா்பில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் காலை 10 மணியளவில் தொடங்கியது.
எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் வழங்கினார்.
இந்நிலையில், இந்த நூற்றாண்டு விழாவில், ஜானகி ராமச்சந்திரன் உடனான தனது நட்பைக் குறிப்பிட்டு நடிகர் ரஜினிகாந்த் பேசிய வாழ்த்து வீடியோ ஒளிபரப்பப்பட்டது. அந்த வீடியோ பதிவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது :
" அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில்
மறைந்த புரட்சி தலைவர் எம்ஜிஆரின் துணைவியாரும் தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் ஆன ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா நடைபெறுவது மகிழ்ச்சியை அளிக்கிறது. இங்கு வந்துள்ள அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விழாவில் பங்கேற்க வேண்டும் என்று கடம்பூர் ராஜூ என்னை நேரில் அழைத்தார். அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
'மருதநாட்டு இளவரசி' திரைப்படத்தில் நடித்த போது எம்.ஜி.ஆர். உடன் காதல் ஏற்பட்டு ஜானகி ராமச்சந்திரன் அவரை திருமணம் செய்து கொண்டார். ராமாவரம் தோட்டத்துக்கு யார் சென்றாலும் வயிறு நிறைய விருந்து வைத்து உபசரித்தார். கட்சி மற்றும் மக்கள் நலனுக்காக கட்சியை விட்டுக் கொடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு அவர் ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்ததை அனைவருமே அறிவார்கள்.
இதையும் படியுங்கள் : முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் செய்தி தொகுப்பாளர் ரூபிகா லியாகத் பேசினாரா?
நான் மூன்று முறை அவரை நேரில் சந்தித்து உள்ளேன். ராகவேந்திரா திரைப்படத்தின் போது அவரை சந்தித்தேன். இரண்டாவது முறை அவர் முதலமைச்சராக இருந்த போது சந்தித்தேன். மூன்றாவது முறை நான் படப்பிடிப்பு தளத்தில் இருந்த போது என்னை அழைத்து சந்தித்தார்.
திரைப்படங்களில் நான் புகைப்பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என ஜானகி ராமச்சந்திரனிடம் எம்.ஜி.ஆர். சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார். அவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து தான். கட்சி இரண்டாக பிளவுபட்ட போது, அவர் எடுத்த முடிவு. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தது அவரின் நல்ல குணம். இரட்டை இலை சின்னம் அதிமுகவின் பிரம்மாஸ்திரமாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது இன்று அவருக்கு நூற்றாண்டு விழா எடுத்துள்ள அதிமுகவுக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்"
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.