“ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு” - இயக்குநர் மாரி செல்வராஜுக்கு #Rajinikanth பாராட்டு!
வாழை திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் வாழை. இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களிலும் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியிருந்த இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் கதை, மாரி செல்வராஜ் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாகி 10 நாட்கள் கடந்த நிலையில், முதல்நாள் போலவே வசூல் வேட்டையில் கலக்கி வருகிறது. குறைவான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் தற்போதுவரை ரூ.16 கோடி வரை வசூல் செய்துள்ளது. வாழை திரைப்படத்தை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதையும் படியுங்கள் :Coolie திரைப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் கதாபாத்திர பெயரை அறிவித்தது படக்குழு!
இந்நிலையில், 'வாழை' திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அந்த திரைப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜூக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது :
"மாரி செல்வராஜ் உடைய 'வாழை' திரைப்படம் பார்த்தேன் ஒரு அற்புதமான, தரமான படம் தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்துருக்கு. மாரி செல்வராஜ் தன்னுடைய இளமை பருவத்திற்கே நம்மை அழைத்து சென்றிருக்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசியை தாங்காமல் அலையும் போது, அந்த தாய் என் பையன் ஒரு கைசோறு சாப்பிடவிடவில்லையே என்று கதறும்போது, நமது நெஞ்சமெல்லாம் துடிக்கின்றது. மாரி செல்வராஜ் தான் ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த திரைப்படத்தின் முலம் நிரூபித்திருக்கிறார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்"
இவ்வாறு ரஜினிகாந்த் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.