அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் #Rajinikanth!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவர் கடந்த 1990 ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இப்படத்தில் அவர் பள்ளி மாணவராக நடித்திருந்தார். பின்னர் 1993 ல் வெளியான அமராவதி திரைப்படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார்.
இதனையடுத்து காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, வலிமை என பல படங்களில் நடித்துள்ளார். சுமார் 33 ஆண்டுகளாக நடித்து வரும் இவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
இவர் தற்போது ‘விடாமுயற்சி’, 'குட் பேட் அக்லி' ஆகிய 2 படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்.6ம் தேதி வெளியாகவுள்ளது. நடிகர் அஜித்குமாருக்கு 2025ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் "வாழ்த்துக்கள்" என்றார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கெளரவிக்கும் வகையில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கலை, அறிவியல், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு மத்திய அரசு பத்ம விருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன.