நடிகர் மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு வாபஸ்! நீதிபதி கண்டிப்பு!!
"சட்டத்திற்கு கட்டுப்பட்டவன் நான்" என நடிகர் மன்சூர் அலிகான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பாகியது.
இதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மற்றும் நடிகை, நடிகர்கள் சமூக வலைதளங்களில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும், நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது. இதனைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் IPC 509 - பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல், IPC 354(A) - பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதையடுத்து, நடிகர் மன்சூர் அலிகானிடம் விசாரணை செய்வதற்காக, இன்று காலை 10 மணி அளவில் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால், உடல் நிலை பாதிப்பால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு மகளிர் போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “எனக்கு 15 நாட்களாக தொடர் இருமலாக (Throat infection) உள்ளது. நேற்று மிகவும் பாதிப்படைந்து பேச மிகச்சிரமமாக இருப்பதால் சிகிச்சையில் இருக்கிறேன்.
நாளை தங்களை சந்திக்க, தாங்கள் குறிப்பிடும் நேரத்தில் வருகிறேன்” என நடிகர் மன்சூர் அலிகான் காவல்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மன்சூர் அலிகானின் கோரிக்கையை ஏற்ற காவல்துறை, நாளை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ஆஜராக அனுமதி வழங்கியது.
இதை தொடர்ந்து, நியூஸ் 7 தமிழுக்கு நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “நான் போன் எடுக்கவில்லை என்று சிலர் கோபித்து கொள்கிறார்கள். குற்றவியல் நடைமுறை சட்டப்பிரின் படி சம்மன் வீட்டிற்கு வந்தது. உடல் நிலை சரியில்லை என்று விளக்கம் அளித்து காவல்துறைக்குக் கடிதம் அனுப்பி விட்டேன். சட்டத்தை மதிக்கிறேன்.
சில ஊடகங்களில் நான் தலைமறைவாகி விட்டதாக போடப்பட்டுள்ளது. ஆனந்தம் அடைந்துள்ளனர். பூட்டிய அலுவலகத்தை வீடியோ எடுத்து சென்று விட்டனர். நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. வழக்கை சந்திக்கிறேன். சட்டத்திற்கு கட்டுப்பட்டவன். என்னுடைய Turn வரும். அப்போது பூதாகரமாக இருக்கும். இயக்குநர் ஆர்.கே.செல்வமணி என்னை பற்றி கூறிய கருத்துக்கு நான் ஒன்றும் பேச விரும்பவில்லை” என நடிகர் மன்சூர் அலிகான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை மன்சூர் அலிகான் வாபஸ் பெற்றார். நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல, நேரத்தை வீணடிக்க வேண்டாம் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி கண்டித்துள்ளார். சென்னை அமர்வு நீதிமன்றத்தில் நடிகர் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த புதிய மனு மீது நாளை விசாரணை நடைபெறுகிறது.
ஆயிரம் விளக்கு காவல் நிலையத்திற்கு பதில் நுங்கம்பாக்கம் என தவறுதலாக குறிப்பிட்டதால் மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.