நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஆஜர்!
நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்காக சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்று ஆஜரானார்.
நடிகை த்ரிஷா மற்றும் நடிகை மடோனா செபாஸ்டின் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து நடிகை த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்தார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பாகியது.
இதையடுத்து, நடிகை த்ரிஷாவுக்கு ஆதரவாக நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு மற்றும் நடிகை, நடிகர்கள் சமூக வலைதளங்களில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு எதிராகவும், நடிகை திரிஷாவுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.
இதனைத்தொடர்ந்து நடிகர் மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் IPC 509 – பெண்ணின் நாகரிகத்தை அவமதிக்கும் செயல் செய்தல், IPC 354(A) – பெண்ணின் அடக்க உணர்ச்சிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
உடல் நிலை பாதிப்பால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை என்று நடிகர் மன்சூர் அலிகான் போலீசாருக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், இன்று மதியம் 2.30 மணியளவில் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
அங்கு, அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் தனலட்சுமி நடிகர் மன்சூர் அலிகானிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். பின்னர் இனி செய்தியாளர்களை சந்திக்க மாட்டேன் என கூறி விட்டு நடிகர் மன்சூர் அலிகான் புறப்பட்டு சென்றார்.