தனது சம்பளம் ரூ.1 கோடியை தானமாக வழங்கிய நடிகர் மகேஷ்பாபு மகள்!
நடிகர் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா தனது முதல் சம்பளமான ஒரு கோடியை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் மகேஷ்பாபு. இவர் தெலுங்கு சினிமாவின் 'பிரின்ஸ்' என்று போற்றப்படுகிறவர். சினிமா மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக வலம் வரும் மகேஷ்பாபு, தனது அறக்கட்டளை மூலம் பல ஏழைக்குழந்தைகளின் அறுவை சிகிச்சைக்கு உதவி வருகிறார்.
இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மகன் கவுதம் கிருஷ்ணா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருவதோடு தனது படிப்பை தொடர்ந்து வருகிறார். மகள் சித்தாரா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவருக்கு 12 வயது ஆகிறது.
இந்நிலையில் மகள் சித்தராவுக்கு ஒரு ஆடை விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடித்ததற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. இந்த சம்பளத்தை அவர் முன்னணி தொண்டு நிறுவனத்திற்கு தானமாக வழங்கி இருக்கிறார். இவரின் இந்த நற்செயலை திரையுலகினர் மட்டுமின்றி அனைவரும் பாராட்டி வருகின்றனர்.