பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார் - அரசியல் தலைவர்கள் வாழ்த்து!
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் 2025ம் ஆண்டுக்கான பத்ம பூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது. அதன்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவித்தார்.
இதற்காக அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் அஜித் குமாருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இன்று நாட்டின் உயரிய விருதைப் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள அஜித் குமார் கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.