“நிதி நிலைக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும்” – திருப்பூரில் சட்டக்கல்லூரி அமைப்பது குறித்து அமைச்சர் ரகுபதி பதில்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், "திருப்பூர் தொழிலில் சிறந்த நகரமாக விளங்கி வருகிறது. இங்கு லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இருப்பினும், திருப்பூரில் சட்டம் பயில விரும்பும் மாணவர்கள் கோவை, திருச்சி, சென்னை என வெளியூர்களுக்கு சென்று பயில்கிறார். சட்டம் பயில வேண்டும் என எண்ணும் ஏழை, எளிய மாணவர்களின் கனவு வெறும் கனவாகவே இருக்கிறது. இதனால், திருப்பூரில் விரைவில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டார்.
இதையும் படியுங்கள் : யூடியூப் பார்த்து தனக்குத் தானே அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர்… மருத்துவமனையில் அனுமதி!
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது,
"திருப்பூரில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என்று செய்தித்துறை அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசின் நிதிநிலைக்கு ஏற்ப தான் சட்டக்கல்லூரி துவங்க முடியும். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுச் சென்று அரசின் நிதிநிலை ஒத்துவருமேயானால் அது குறித்து பரிசீலக்கப்படும்"
இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.