‘கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை ’ - பள்ளிக் கல்விதுறை எச்சரிக்கை!
கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்விதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேர்வுகள் முடிந்து அனைத்து பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த கொளுத்தும் வெயிலிலும் சில பள்ளிகள் 10, 11, 12 ஆம் வகுப்பு செல்ல உள்ள மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துகின்றன. இந்நிலையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும், மீறினால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்விதுறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்விதுறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது;
‘தமிழக அரசு, கோடை விடுமுறை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவித்த பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்’.
என்று பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி, தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் , இதில் அனைத்து கல்வி அலுவலர்களும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.