"பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை " - தலைமைச் செயலாளர் எச்சரிக்கை!
பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் எதிர்பாராத தொடர் கனமழையால் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடரந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்: சென்னையை புரட்டிப் போட்ட கனமழை | களத்தில் நியூஸ்7 தமிழ்…
இதனால், உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல், மக்கள் தவித்து வருகின்றனர். மழை குறைந்ததை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை முதல் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர். பல்வேறு நபர்களும், தொண்டு நிறுவனங்களும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு உதவி வருகின்றனர்.
இந்த நிலையில் உயிரிழப்புகளை தடுக்கவே மின் இணைப்பு வழங்கப்படவில்லை என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். மேலும் பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.