'ஆட்டோ கட்டணத்தை உயர்த்தினால் நடவடிக்கை' - போக்குவரத்துத்துறை எச்சரிக்கை !
தமிழகம் முழுவதும் வரும் பிப்.1ம் தேதி முதல் ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டணம் உயர்த்தப்படுவதாக அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தது. அதன்படி, புதிய கட்டணமாக முதல் 1.8 கி.மீட்டருக்கு ரூ. 50 கட்டணம் நிர்ணயம் செய்து, கூடுதலாக ஒவ்வொரு கிமீ.க்கும் ரூ.18 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல், இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்தால் 50 சதவீதம் கூடுதலாக வசூலிக்கப்படும் என்றும், காத்திருப்பு கட்டணமாக நிமிடத்திற்கு ரூ.1.50 காசுகள் பெறப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை தவிர ஆட்டோ ஓட்டுநர்கள் தன்னிச்சையாக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டண உயர்வை அறிவிக்க முடியாது. அதனை அரசுதான் முடிவெடுக்கும். கட்டண உயர்வு தொடர்பான முடிவுகள் அனைத்தும் அரசின் பரிசீலனையில் உள்ளது.
எனவே, பிப்.1ம் தேதி முதல் ஆட்டோ சங்கங்கள் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக வெளியாகும் அறிவிப்புகள் எங்களின் கவனத்திற்கு வந்துள்ளன. அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதலாக வசூலிக்கப்பட்டால் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் பயணிகள் புகார் அளிக்கலாம். அதன்படி, புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.