“விடுதி காப்பாளர் மீது புகார் அளித்தால் நடவடிக்கை” - திருச்சி #NIT விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பேச்சு!
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக விடுதியின் பெண் காப்பாளர் மீது மாணவிகள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், துவாக்குடியில் என்ஐடி எனப்படும் தேசிய தொழில்நுட்பப் கழகம் செயல்பட்டு வருகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இந்த கல்லூரியில், தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் என 6000க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
மாணவ மாணவிகள் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கியும், வெளியில் அறைகள் எடுத்து தங்கியும் கல்வியை கற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று என்ஐடியில் உள்ள OPEL மகளிர் விடுதியில் மின்சார பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய வந்த என்ஐடி ஒப்பந்த ஊழியர் கதிரேசன் என்பவர், அங்கிருந்த மாணவி ஒருவர் முன்னிலையில் ஆபாச செய்கையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, இச்சம்பவம் குறித்து சக மாணவ, மாணவிகளிடம் கூறியுள்ளார். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து என்ஐடி நிர்வாகத்திடமும், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிரேசனை கைது செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அதனை கண்டித்து என்ஐடி மாணவ, மாணவிகள் விடுதியின் முன் திரண்டு விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகளை விமர்சித்த விடுதி வார்டனை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய வேண்டும், இது போன்ற குற்ற செயல்கள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாலை வரை போராட்டம் நடந்த நிலையில், காலை என்ஐடி நிர்வாகம் மாணவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது விடுதி கண்காணிப்பாளர் தனது தவற்றை உணர்ந்து மாணவ, மாணவிகளிடம் மன்னிப்பு கேட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் விடுதியின் பெண் காப்பாளர் மீது மாணவிகள் புகார் அளித்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.