“இணையவழி ஆபாச தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!” - புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.வந்திதா பாண்டேக்கு எம்.பி.கனிமொழி ஆதரவு!
புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டேக்கு எம்.பி. கனிமொழி ஆதரவு தெரிவித்திருப்பதோடு, இணையவழி ஆபாச தாக்குதல் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி மாவட்ட எஸ்.பி.யாக வருண்குமார் ஐ.பி.எஸ் பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக உள்ளார். இவர்கள் இருவருக்கும் எதிராகவும் தொடர்ச்சியாக இணையத்தில் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் அவதூறு கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதனால், எக்ஸ் தளத்தில் இருந்து தானும், தனது மனைவியும் விலகுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் விடுத்த அறிக்கையில், "ஒரு சராசரி குடும்ப நபராக, குழந்தைகள், பெற்றோர்கள் மீது கொண்டுள்ள அக்கறை காரணமாக X இணைய உரையாடல்களில் இருந்து நானும் எனது மனைவி வந்திதா பாண்டே IPSம் தற்காலிகமாக விலக முடிவு எடுத்துள்ளோம். இதை பயத்தினாலோ அருவருப்பினாலோ செய்யவில்லை. வக்கிர புத்தியும் கொடூர எண்ணமும் கொண்டவர்கள் தான் இதற்காக அவமானப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், வந்திதா பாண்டேவுக்கு ஆதரவாக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கனிமொழி தனது X தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
"பெண்கள் எந்த துறையில் இருந்தாலும், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், அவர்கள் சார்ந்த ஆணை இழிவு செய்யும் வண்ணம், அந்த பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவெறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல். புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே IPS மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்தி வரும் அனைவர் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒரு சக பெண்ணாகவும், சமூக அக்கறை உள்ள நபராகவும் வந்திதா பாண்டே IPS அவர்களின் கரம்பற்றி எனது ஆதரவையும், அன்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.