மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்தவர்கள் மீது ஆசிட் வீச்சு! - குழந்தை உட்பட 5 பேர் காயம்!
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் மெட்ரோ ரயில் நிலைய வாசலில் படுத்திருந்த சாலையோர மக்கள் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே சாலையோரம் வசிக்கும் மக்கள் மழையின் காரணமாக நேற்றிரவு ரயில் நிலைய வாசலில் படுத்து உறங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று (மே - 19ம் தேதி) இரவு, அடையாளம் தெரியாத ஒரு நபர் அங்கு படுத்து இருந்தவர்கள் மீது ஆசிட் வீசி சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்த ஆசிட் வீச்சு சம்பவத்தில் ரயில் நிலைய வாசலில் படுத்திருந்த ஒரு குழந்தை உட்பட 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த குழந்தை உள்பட ஐந்து பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இதையும் படியுங்கள் : ஐபிஎல் 2024 : பஞ்சாபை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது ஹைதரபாத்!
மேலும் இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது ஆசிட் வீசி சென்ற அடையாளம் தெரியாத நபரை கண்டுபிடிக்கும் நோக்கத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு உள்ளனர். மேலும், விசாரணையில் அந்த ஆசிட் பாட்டில் நேரடியாக அங்கு இருந்தவர்கள் மீது விழவில்லை என்றும், அதனால் தான் பெரிய அளவில் யாருக்கும் காயம் இல்லாமல் தப்பி உள்ளார்கள் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.