முஸ்லிம்களுக்கு எதிரான சர்ச்சை கருத்து | இன்று ரிலீசாக இருந்த 'ஹமாரே பரா' திரைப்படத்திற்கு கர்நாடக அரசு தடை!
ஹமாரே பரா என்ற ஹிந்தி திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தி மொழிப் படமான 'ஹமாரே பரா' முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகளைக் குறி வைத்து இழிவாக சித்தரிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, இந்தப் படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நேரத்தில் கர்நாடகாவில் படத்தைத் தடை செய்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த சர்ச்சைக்குரிய படத்தின் டிரெய்லர் மற்றும் காட்சிகளை மாநிலத்தில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள், திரையரங்குகள், தனியார் தொலைக்காட்சி சேனல்கள் உள்ளிட்ட எந்த வகையிலும் ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாநில அரசின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசின் உத்தரவை யாராவது மீறுவது கண்டறியப்பட்டால், குற்றவாளிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை இயக்குநர் அலோக் மோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக இந்த சர்ச்சைக்குரிய படமான ஹமாரே பராஹ் இன்று (ஜூன் 7 ) திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பாம்பே உயர்நீதிமன்றமும் ஜூன் 14 ஆம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதித்துள்ளது.
சமீபத்தில், புனேவில் வசிக்கும் ஒருவர் தாக்கல் செய்த மனு மற்றும் பம்பாய் உயர்நீதிமன்றம், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர், 'ஹமாரா பாரா' படத்தின் வெளியீட்டை ஜூன் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.