#INDvsBAN | சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணி சாதனை!
சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த 2வது அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது. குவாலியரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடந்த 2வது ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி ஹைதராபாத்தில் நேற்று நடைபெற்ற கடைசி டி20 ஆட்டத்தில் 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில், இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆடினர். இந்திய அணி தரப்பில், அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 75 ரன்களும், சஞ்சு சாம்சன் 111 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 297 ரன்களை குவித்தது. வங்காளதேச அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்திய அணி 133 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் குவித்த 2வது அணி என்ற சாதனையை இந்தியா அணி படைத்துள்ளது. 2023-ம் ஆண்டு ஹாங்சோவில் நடந்த மங்கோலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நேபாள அணி 3 விக்கெட்டுக்கு 314 ரன்கள் எடுத்ததே சர்வதேச டி20 போட்டியில் அதிகபட்ச ரன்னாக இருக்கிறது.