தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதல் மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் இயல்பை விட அதிகமாக மழைப்பொழிவு பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரையிலான நான்கு மாதங்கள் தென்மேற்குப் பருவமழை காலமாகும். பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கன மழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்றும், ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலார்ட்டும், கோவை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலார்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. கோவையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகின்றது. இதனால் பூமி குளிர்ந்துள்ளது, மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன்படி கடந்த ஜூன் 1 முதல் ஜூலை 18(இன்று) வரை தமிழகத்தில் 160.6 மி.மீ மழை பெய்துள்ளது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் பெய்யும் சராசரி மழை அளவு 85.5 மி.மீ ஆகும். ஆனால் தற்போதுவரை தமிழகத்தில் 88 சதவீத மழைப்பொழிவு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.