உதகையில் கட்டுமான பணியின் போது விபத்து: 6 பெண்கள் உள்பட 7 பேர் உயிரிழப்பு!
உதகை லவ்டேல் பகுதியில் கட்டுமான பணியின் போது தடுப்பு சுவர் மற்றும் பொது
கழிப்பிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
நீலகிரி மாவட்டம் உதகை லவ்டேல் பகுதியில் தேயிலை எஸ்டேட்டில் புதிய கட்டிடம்
கட்டும் பணி கடந்த ஒரு வருட காலமாக நடைபெற்று வருகிறது. இந்த கட்டடத்தையோட்டி அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த பொது கழிப்பிடம் இருந்தது.
இந்நிலையில், இன்று தடுப்பு சுவர் கட்டும் பணிக்காக 10 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது குடியிருப்பு பகுதியை சுற்றி 15 அடி உயரத்திற்கு தடுப்பு சுவர் அமைப்பதற்கான பள்ளம் தோண்டும் போது திடீரென கழிப்பிட கட்டிடம் எதிர்பாராத விதமாக தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் தொழிலாளர்கள் இடிபாடுகளில் புதைந்தனர்.
தொழிலாளர்கள் அலறல் கேட்டு அருகிலிருந்தவர்கள் உடனடியாக காவல்துறை மற்றும்
தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தீயணைப்புத்துறையினர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு ஒரு ஆண் உட்பட 7 பெண்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், சங்கீதா(35), ஷகிலா(30), பாக்யா(36), உமா(35), முத்துலட்சுமி(36), ராதா(38) ஆகிய 6 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், மீட்கப்பட்ட ஒரு பெண் மற்றும் ஆண் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக பி1 போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.