‘அபத்தம், சிறுபிள்ளைதனம்’ : ஆளுநர் மாளிகை கண்டனம்!
ஆளுநரின் செயல் சிறுபிள்ளைதனமானது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், இதற்கு ஆளுநர் மாளிகை கண்டனம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கும். ஆனால் சட்டமன்றத்திற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமலேயே 3 நிமிடங்களிலேயே அவையிலிருந்து வெளியேறினார். ஆனால் இது முதல் முறையல்ல.
இதனையடுத்து இதற்கு “இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமும், தேசிய கீதமும் புறக்கணிக்கப்பட்டதே காரணம்” என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. ஆனால் ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். முதலமைச்சர் ஆளுநரின் இந்த செயல் சிறுபிள்ளைதனமானது என விமர்சித்திருந்தார். மேலும் நேற்று சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
“பராசக்தி படத்தில் வரும் “இந்த நீதிமன்றம் எத்தனையோ விசித்திரமான வழக்குகளை பார்த்துள்ளது” வசனத்தை போல, சட்டமன்றம் சில ஆண்டுகளாக ஆளுநரை பொறுத்தவரை விசித்திரமான காட்சிகளை பார்த்து வருகிறது. உரையாற்ற வருவார், ஆனால் உரையாற்றாமலேயே போய்விடுவார். இந்த காரணத்தினால்தான் ஆளுநரின் செயல்பாடுகளை சிறுபிள்ளைதனமானது என விமர்சித்தேன்” என மீண்டும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இத்தகைய ஆணவம் நல்லதல்ல என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கீதத்துக்கு உரிய மரியாதையை வலியுறுத்துவதையும், அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளைச் செய்யச் சொல்வதையும் "அபத்தமானது" மற்றும் "சிறுபிள்ளைத்தனமானது" என்று வற்புறுத்துகிறார்.
பாரதத்தை ஒரு தேசமாகவும் அதன் அரசியலமைப்பாகவும் ஏற்றுக்கொள்ளாத மற்றும் மதிக்காத ஒரு தலைவராக இருக்கும் அவர், கூட்டு நலன்கள் மற்றும் சித்தாந்தங்களின் உண்மையான நோக்கங்களை வஞ்சகம் செய்ததற்கு நன்றி. இத்தகைய ஆணவம் நல்லதல்ல. பாரதமே உயர்ந்த தாய் என்பதையும், அவளது குழந்தைகளுக்கு அரசியலமைப்பே உயர்ந்த நம்பிக்கை என்பதையும் மறந்துவிடாதீர்கள். அவர்கள் இத்தகைய வெட்கக்கேடான அவமானத்தை விரும்பவோ பொறுத்துக்கொள்ளவோ மாட்டார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.