#LateralEntry முறை ரத்து - எதிர்ப்புக்கு பணிந்தது மத்திய அரசு!
யுபிஎஸ்சி பதவிகளில் நேரடி நியமன முறைக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதனை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் இணைச் செயலா் முதல் துணைச் செயலா்கள் வரையிலான 45 பணியிடங்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதிலாக தனியார் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை நேரடியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கான விளம்பரத்தை அண்மையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இதேபோல தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “லேட்டரல் எண்ட்ரி முறையில் பணி நியமனம் செய்வது சமூகநீதி மீதான நேரடி தாக்குதலாகும். மத்திய அரசு பணியிடங்களுக்கு நேரடி நியமனம் என்பது எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கான வாய்ப்புகளை பறிக்கிறது” என தெரிவித்திருந்தார்.
மேலும் நேரடி நியமன முறைக்கு ஆளும் பாஜக அரசின் கூட்டணியில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பஸ்வான் ” நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு பரிசீலிக்கப்படவில்லை என்றால் நானும் எனது கட்சியும் முற்றிலும் இதற்கு எதிரானவர்கள். நாங்கள் இதுகுறித்து உரிய துறையிடம் பதிவு செய்துள்ளோம். வரும் நாட்களில் நேரடி நியமனத்தில் இடஒதுக்கீடு கேட்டு வலுவான குரல் எழுப்புவோம். அனைத்துவித அரசுப் பணி நியமனங்களிலும் இடஒதுக்கீட்டு விதிகளை பின்பற்ற வேண்டும்.” என தெரிவித்து தனது எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார்.
இந்த நிலையில் மத்திய அரசுப்பணிகளில் நேரடி நியமன முறையை (Lateral Entry) ரத்து செய்யுமாறு யுபிஎஸ்சிக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கடிதம் எழுதியுள்ளார்.