For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“பொதுமக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் ஆவின் பெற்றுள்ளது!” -தமிழ்நாடு அரசு!

01:55 PM Jun 17, 2024 IST | Web Editor
“பொதுமக்களின் ஆதரவையும்  நம்பிக்கையையும் ஆவின் பெற்றுள்ளது ”  தமிழ்நாடு அரசு
Advertisement

பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று சிறந்து விளங்குகிறது ஆவின் நிறுவனம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

Advertisement

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், “இந்தியாவில் 1970-80-களில் நடைபெற்ற வெண்மைப் புரட்சிக்கு முன்பாகவே 1958 ஆம் ஆண்டே தமிழ்நாட்டில் பால் உற்பத்தியினை ஒருங்கிணைக்கும் நோக்கில், பால் வளத்துறை தொடங்கப்பட்டு 1965 ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறையிலிருந்து நிர்வாகம் மற்றும் சட்டரீதியான அதிகாரங்கள் பால்வளத் துறைக்கு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கலைஞர் அவர்கள் முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பிலிருந்து 1972 ஆம் ஆண்டில் நிறுவனங்கள் சட்டத்துறையின் கீழ் (Companies Act) வணிக நடவடிக்கைகளை மேலாண்மை செய்யும் நோக்கில் தமிழ்நாடு பால் உற்பத்தி வளர்ச்சிக் கழகம் (TNDDC) உற்பத்திக் கழகம் உருவாக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களின் காரணமாக பால் உற்பத்தி வளர்ச்சிக் கழகத்தின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டத்தின் கீழ் பதியப்பட்டு தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்திற்கு மாற்றப்பட்டது. உலகளவில் அதிக அளவிலான பால் உற்பத்தியில் இந்தியா முன்னணி நாடாக திகழும் வேளையில், நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில், தமிழ்நாடு 4.57 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது.

தமிழ்நாடு பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாடுத்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது கிராம அளவில் மொத்தம் 10,814 தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன. இவற்றில் செயல்பாட்டில் உள்ள 9,189 சங்கங்களில் 1,856 சங்கங்கள் மகளிர் சங்கங்களாகச் செயல்படுகின்றன.

பால் வளத்துறையின் முதன்மையாக நோக்கமே கிராம அளவில் ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட கால்நடை வளர்ப்பினை ஊக்குவித்தல், அதன் மூலம் பால் உற்பத்தியினைப் பெருக்குதல் ஆகும்.  தன்னிறைவைப் பெறும் உயரிய நோக்கில் பல்வேறு திட்டங்கள் திறம்படச் செயல்படுத்துதல் ஆகும்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் கடந்த அரை நூற்றாண்டு காலமாக மக்களின் மனதில் பதிந்திருக்கும் ஆவின் நிறுவனத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்குத் தரமான பால் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பால் அட்டைகள் மூலம் குறைந்த விலையில் பால் விநியோகமானது சீரான முறையிலும் நேர்த்தியான முறையிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மக்களின் அடிப்படைத் தேவைகளில் முக்கிய பங்கு வகிப்பது பால் பயன்பாடு ஆகும். இதனை கருத்தில் கொண்ட முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பேற்ற முதல் நாளில் கையொப்பமிட்ட 7 அறிவிப்புகளில் ஆவின் விலையை லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் குறைத்து உத்தரவிட்டது. 3 ஆண்டுகளில் பால் வளத்துறையினை மேம்படுத்திடும் வகையில் திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக பால் கொள்முதல் மற்றும் உற்பத்தித் திறனை உயர்த்துதல், நவீன தொழில்நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஆவின் பாலை குளிரூட்டும் வகையில் சேமிப்புக் கிடங்குகளை அமைத்தல், நுகர்வோரின் தேவையறிந்து அதற்கேற்ப ஆவின் மூலம் விற்பனை செய்யப்படும் ஆவின் நெய், ஐஸ்கீரிம்,யோகார்ட்,  பாயாசம் மிக்ஸ், பால் புரத நூடுல்ஸ். டெய்ரி ஓய்ட்னர். 40 நாட்கள் வரையில் கெட்டுக் போகாமல் இருக்கும் பதப்படுத்தப்பட்ட பால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் உலகத்தரம் வாய்ந்த ஆவின் பால் பவுடர் உற்பத்தியை அதிகரித்தல். பால் உற்பத்தியாளர்களின் கொள்முதல் விலையை அவ்வப்போது உயர்த்தி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பால் கொள்முதல் மற்றும் விநியோகம்

தமிழ்நாடு முழுவதும் இயங்கி வரும் 9,189 தொடக்க பால் உற்பத்தியர் கூட்டுறவுச் சங்கங்கள் வாயிலாக நாள் ஒன்றுக்கு சுமார் 3.85 இலட்சம் பால் உற்பத்தியாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். இதன் மூலம் தற்போது நாளொன்றுக்குச் 35.67 இலட்சம் லிட்டர் பால் சங்க அளவில் உற்பத்தி செய்யப்பட்டு, அதில் 4 இலட்சம் லிட்டர் பால் உள்ளூர் தேவைக்காக சங்கங்கள் மூலம் விற்பனை செய்தது போக. 31.67 இலட்சம் லிட்டர் பால் 27 மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த 22.7.2021 அன்று ஆவின் நிறுவனம் 43.05 இலட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து சாதனை படைத்துள்ளது.மேலும் பால் கொள்முதலை அதிகரிக்கும் பொருட்டு உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலை உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டருக்கு 32 ரூபாயிலிருந்து 35 ஆகவும், எருமைப் பாலின் விலை லிட்டருக்கு 41 ரூபாயிலிருந்து 44 ஆகவும், உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கிராமப்புற பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த 18.12.2023 முதல் கொள்முதல் செய்யப்படும் பசும்பால் மற்றும் எருமைப்பால் லிட்டர் ஒன்றுக்கு 3 ரூபாய் ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 18.12.2023 முதல் ஏப்ரல் 2024 வரையான காலத்திற்கு 108.30 கோடி ரூபாய் ஊக்கத் தொகையாகப் பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களும் பயனடைந்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் திமுக ஆட்சியில் 10.10 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு சாதனைப் படைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் ஒட்டுமொத்த பால் உற்பத்தியில் 4.57 சதவிகிதம் ஆகும். இதன் மூலம் பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்று ஆவின் நிறுவனம் சிறந்து விளங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement